அரியலூர், ஜூன்:09
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், கோட்டைக்காடு வெள்ளாற்றில் அணுகு சாலை அமைக்கக் கோரிய கூட்டமைப்பு நிருவாகிகள் ஆய்வுக் கூட்டம் உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் மு. ஞானமூர்த்தி தலைமையில் கோட்டைக்காடு வெள்ளாற்றில் நேற்று சனி காலை 10 மணிக்கு நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்டத்தையும் இணைக்கும் கோட்டைக்காடு-பெண்ணாடம் வெள்ளாறு மேம்பாலம் அணுகுசாலை போட சுமார் ரூ. 5.25 கோடியில் ஒப்பந்தம் விடப்பட்டு நாமக்கல்லைச் சார்ந்த ஒப்பந்ததாரர் ஒப்பந்தப்புள்ளி எடுத்து 2 ஆண்டுகளாக 20% பணிகூட நடைபெறாத நிலையில் இதுகுறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப் பகுதி மக்களின் ஆலோசனைக் கூட்டம் 18-5-2024 அன்று நடைபெற்றது.
கூட்டத்தில் கொண்டுவந்த தீர்மானத்தின்படி பணிகள் துவங்கி ஆமைவேகத்தில் நடைபெறுகிறது. ஒப்பந்ததாரர்களிடம் கேட்டால் பணி நிறைவடைய இன்னும் 6 மாதம் ஆகும் எனக் கூருகின்றனர்.
எனவே அனைத்து இயக்க கூட்டத்தில் எடுத்த முடிவின்படி 20-6-2024 வியாழக்கிழமை காலை 10 மணிக்குக் கோட்டைக்காடு வெள்ளாறு பாலத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் பருவமழைத் துவங்குவதற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரரையும், தமிழக அரசையும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆய்வுக் கூட்டத்தில் நல்லூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் செல்வி ஆடியபாதம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட விவசாய அணித் தலைவர் பாலசிங்கம், தமிழ்ப் பேரரசு கட்சி மண்டலத் தலைவர் முடிமன்னன், அதிமுக (ஓபிஎஸ்) ஒன்றிய செயலாளர் எழிலரசன், ஆலத்தியூர் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி, பாசிக்குளம் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் இராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.