கருங்கல், மார்- 5
கருங்கல் அருகே மூசாரி என்ற பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பகுதி வழியாக நேற்று மாலை பள்ளியாடி பகுதியில் இருந்து 2 வாலிபர்கள் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பள்ளி அருகே வந்தபோது பின்னால் துரத்திக்கொண்டு சொகுசுகாரில் வந்த கும்பல் ஒன்று பைக்கில் சென்ற வாலிபர்களை வழிமறித்தனர். அப்போது பைக்கில் இருந்து இரண்டு வாலிபர்களும் கீழே விழுந்தனர்.
உடனே காரில் இருந்து இறங்கிய நான்கு பேர் கும்பல் சரமாரியாக இரண்டு பேரையும் அடித்து உதைத்தனர். சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் திரண்டனர். உடனே பைக்கில் இருந்த சாவியை எடுத்துக்கொண்டு கும்பல் காரில் தப்பி செல்ல முயன்றனர். அப்போது ஒருவர் பொதுமக்களிடம் சிக்கினார்.
விசாரணையில் பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் என்றும் பிடிபட்ட நபர் அவர்களை தாக்கவில்லை என்றும் கூறினார். இது குறித்து கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் ஒரு மணி நேரம் ஆகியும் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைய தொடங்கினர்.
இந்த நிலையில் திடீரென ஒரு நபர் பைக்கில் வந்து எடுத்துச் சென்ற பைக் சாவியை அங்கு வீசி விட்டு சென்று விட்டார். அடி வாங்கிய நபர்கள் நொந்தபடி அங்கிருந்து சென்றனர்.