தருமபுரி மாவட்டம் அரூரில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நான் முதல்வன்-கல்லூரி கனவு திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. ஆட்சியர் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் கையேட்டினை வழங்கி பேசினார். இளைய சமுதாயத்தை நல்ல முறையில் உருவாக்க வேண்டும். என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது தான் கல்லூரி கனவு திட்டம். பள்ளி கல்வியை வெற்றிகரமாக முடித்து கல்லூரி கல்வியை தொடரும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் என பல திட்டங்கள் பயன்பாட்டில் உள்ளன. இது போன்ற திட்டங்களை பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோரும் அறிந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இடை நிற்றலுக்கு வாய்ப்பு தந்து விடக்கூடாது. மாணவ, மாணவிகள் பட்டப்படிப்பை மேற்கொண்டு வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ள இந்த கல்லூரி கனவு திட்டம் பயனளிப்பதாக இருக்கும் .இத்தகைய திட்டங்களை மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, கல்லூரி கல்வி இயக்கக மண்டல இணை இயக்குனர் சிந்தியா செல்வி, இணை இயக்குனர் சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



