நாகர்கோவில் மார்ச் 14
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையானது அருமனை சந்திப்பு பகுதியின் மிக அருகாமையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அமைந்துள்ளது. இந்த கடை எண் 4826 என்பதாகும்.
இந்த டாஸ்மாக் கடையின் வழியாகவே பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும், இந்து, கிறிஸ்தவ ஆலயங்களுக்கு செல்பவர்களும் அதிகமான அளவிற்கு சென்று வருகின்றனர். அருமனையில் பிரதான சந்திப்பு பகுதியின் அருகாமையில் அமைந்திருக்கும் இந்த டாஸ்மாக் கடையினால் அப்பகுதி மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் மிக அதிகம். அருமனை சந்திப்பின் பிரதான சாலையில் இருக்கும் இந்த டாஸ்மாக் கடையில் குடிக்கும் குடி நோயாளிகள் மது போதையில் செய்யும் தகராறுகளால் அப்பகுதி மக்கள் மிகவும் தொந்தரவுக்கு உள்ளாகி வருகின்றனர்.
பொதுமக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ள இந்தப் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்காக மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கையும் எழுப்பி வந்தனர்.
அண்மையில் மத நல்லிணக்க நிகழ்விற்கு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இதே கோரிக்கையை வலியுறுத்தி இருந்தார். பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் அருமனை டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று செய்தியாளர்கள் சந்திப்பின் போதும் அவர் வலியுறுத்தினார்.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தலையும், பொது அமைதிக்கு ஆபத்தையும் ஏற்படுத்தி வரும் அருமனை டாஸ்மாக் கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
அதை மாவட்ட நிர்வாகமும், டாஸ்மார்க் அதிகாரிகளும் உடனடியாக செய்யாத பட்சத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்களை திரட்டி பொதுமக்களின் அமைதிக்கு பங்கும் விளைவிக்கும் அருமனை டாஸ்மாக் கடையை முற்றுகையிடுவோம். ஏற்கனவே பொதுமக்களின் எதிர்ப்பு இருக்கக்கூடிய பகுதிகளில் இயங்கிவரும் டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று நீதிமன்ற வழிகாட்டல் இருந்தும், அந்த உத்தரவை காற்றில் பறக்க விடப்பட்டிருக்கும் சம்பவத்தையும் கண்டிக்கிறேன். அருமனை டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றும்வரை விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்களுக்காக உறுதியுடன் களமாடும். எப்போதும் போல் மக்கள் பிரச்சினைகளுக்காக மக்களுடன் களத்தில் நிற்போம்.”இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



