நாகர்கோவில் ஜூன் 28
குற்ற வழக்கை திரும்ப பெறாததால் வீட்டிற்கு செல்லும் பாதையை அடைத்து அராஜகத்தில் ஈடுபட்டு வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தம்பதியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது :-
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோணங்காடு பகுதியில் வசித்து வருபவர் லாரன்ஸ் கென்னடி. இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் குளச்சல் பணிமனையில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளனர். இவர்களது வீட்டின் அருகில் உள்ள ஸ்மைலின் நிதிஷ் என்பவர் லாரன்ஸ் கென்னடியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொடூரமாக தாக்கியதில், தோள்பட்டை எலும்பு, நெற்றி பட்டை மற்றும் மூக்கு பகுதி எலும்புகள் உடைந்து நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த பின்னரும் குற்றவாளியின் மிரட்டல் தொடர்ந்ததால் குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி லாரன்ஸ் கென்னடியின் மனைவி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் முறையிட்டதன் பேரில் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது குற்றவாளி ஸ்மைலின் நிதிஷ் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வருகிறார். இந்த நிலையில், சிலர் சேர்ந்து லாரன்ஸ் கென்னடி, ஸ்மைல் நிதிஷ் மீது கொடுத்திருந்த வழக்கை பின்வலிக்க வேண்டும், இல்லையென்றால் உங்கள் வீட்டிற்கு செல்லும் வழிப் பாதையை அடைப்போம் என்றும் மிரட்டலும் விடுத்து வந்தனர். இந்த நிலையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டுவரும் வழிப்பாதை அடைக்கப்பட்டால், வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கோ, உள்ளே வருவதற்கோ இயலாத சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளுக்கு பாடசாலை செல்வதற்கும் இயலாத சூழ்நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து இரணியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், தேவசகாயம் மேற்படி வழி பாதையை சேதப்படுத்தி மிரட்டியது சம்பந்தமாக குளச்சல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குளச்சல் காவல் நிலையத்தினர் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் லாரன்ஸ் கென்னடி பணிக்கு சென்ற நேரத்தை பயன்படுத்தி, லாரன்ஸ் கென்னடியின் வீட்டிற்கு செல்லும் வழிப் பாதையை கேட் போட்டு அடைத்துள்ளார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழி பாதையில் போடப்பட்டுக்கொண்டிருக்கும் கேட் பூட்டு போட்டு அடைக்கப்பட்டால், வீட்டில் உள்ள எவரும் வெளியே வரவும், வெளியில் இருப்பவர்கள் உள்ளே செல்வதற்கோ இயலாத அவல நிலை ஏற்படும். எனவே காவல்துறையினர், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.