தென்தாமரைகுளம்., மே. 08.தமிழ்நாடு அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, கல்லூரிக் கல்வி இயக்ககம் ,தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித் திட்ட குழுமம் சார்பில் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராகப் பணிபுரியும் முனைவர் சு. ஜெயக்குமாரி -க்கு 2022-2023 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விருது வழங்கப்பட்டது .
சென்னை கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் வைத்து நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் , தமிழ்நாடு மாநில நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் முனைவர் குணாநிதி முன்னிலையில், கல்லூரிக் கல்வி இயக்கக கமிஷனர் சுந்தரவல்லி ஐ .ஏ. எஸ் இந்த நாட்டு நலப்பணித் திட்ட விருதை வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விருதைப் பெற்ற முனைவர் ஜெயக்குமாரி 2024ம்- வருடம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவிலான சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விருதைப் பெற்றுள்ளார். 2022 ஆம் வருடம் இமாச்சல பிரதேசம் மணாலியில் அமைந்துள்ள அடல் பிகாரி வாஜ்பாய் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மௌண்ட்டினரிங் அண்ட் அலைடு ஸ்போர்ட்ஸ் எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் நடைபெற்ற தேசிய சாகச முகாமில் கலந்து கொண்டு கல்லூரிக்கும் பல்கலைக்கழகத்திற்கும் பெருமை சேர்த்தார். 2025 பிப்ரவரி மாதம் விவேகானந்தா கல்லூரியில் தமிழ்நாடு அரசின் நிதி பெற்று 14 மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்கள் மற்றும் நலப் பணித்திட்ட அலுவலர்கள் கலந்து கொண்ட தேசிய ஒருமைப்பாட்டு முகாமை ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு நடத்தினார்.இது மட்டுமின்றி கன்னியாகுமரி மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.