விளாத்திகுளம், செப்டம்பர் 01 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள விருசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகசாமி என்பவர் தனது இளம் வயதில் இருந்து மாட்டு வண்டிகள் பந்தயத்தின் மீது தீராத காதல் கொண்டுள்ளார். இதனால் விளாத்திகுளம் பகுதிகளில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகளில் மாட்டு வண்டி பந்தயத்தில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு தனது மூத்த மகன் முத்துப்பாண்டி என்பவரின் திருமணத்தை முன்னிட்டு மாட்டு வண்டிகள் பந்தயம் நடத்தி அசத்தினார்.
அதேபோல் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெற்ற தனது இளைய மகனான முரளி என்பவரின் திருமண விழாவை முன்னிட்டு விருசம்பட்டி கிராமத்தில் மாபெரும் மாட்டுவண்டி பந்தயம் நடத்தினார். பூஞ்சிட்டு, தேஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 29 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் ஒட்டி வந்த சாரதி, பின்சாரதிகளுக்கு பரிசுத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அதேபோல் மாட்டுவண்டி பந்தயத்தை காண வந்த பொதுமக்கள், ஓட்டி வந்த சாரதி என அனைவருக்கும் அசைவ அன்னதானம் வழங்கி ஆறுமுகசாமி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த மாபெரும் மாட்டு வண்டி பூஞ்சிட்டு பந்தயத்தை திமுக மாநில இலக்கிய அணி துணைப் பொதுச் செயலாளர் பெருநாழி போஸ் தொடங்கி வைத்தார். மற்றும் தேன்சிட்டு போட்டியை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் தொடங்கி வைத்தார்.



