ஈரோடு, ஆக. 28 –
ஈரோடு புறநகர் மாவட்ட முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளரும் அ.தி.மு.க சசிகலா அணி மாவட்ட பொறுப்பாளருமான அத்தாணி ஏ.சி. பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேலுமணியிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அனைவராலும் சின்னம்மா என்று அழைக்கப்படும் சசிகலாவை வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த குமரன் என்பவர் ஒரு யூடியூப் சேனலில் அவதூறாகவும் தரக்குறைவாகவும் தகாத வார்த்தைகளாலும் கொலை மிரட்டல் விடுக்கும் விதத்தில் பேசி உள்ளார். இது எங்களது மனதை புண்படுத்தி உள்ளது.
எனவே, சசிகலாவை பற்றி தரக்குறைவாக பேசிய குடியாத்தம் குமரன் மீதும் அதை ஒளிபரப்பிய யூடியூப் சேனல் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடியாத்தம் குமரனை கைது செய்வதோடு அந்த யூடியூப் சேனலையும் தடை செய்ய வேண்டும். சசிகலாவை அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் எங்களது போராட்டம் தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



