கோவை, ஆகஸ்ட் 08 –
கோவை மாவட்டம் பவர் ஹவுஸ் பகுதியில் தமிழ்நாடு பொது நூலகத்துறை ஒருங்கிணைந்த ஊர்ப்புற நூலகர்கள் நல அமைப்பின் சார்பில் ஊர்ப்புற நூலகங்களின் தரம் உயர்த்தல் மற்றும் அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 178 நிறைவேற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மண்டல அளவிலான உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெற்றன.
சுமார் 13 ஆண்டுகளாக ஊர்ப்புற நூலகர்களாக பணியாற்றி வரும் 1006 பேர், குறைந்த ஊதியம், பதவி உயர்வு அளிக்காமலும், ஊதிய உயர்வு வழங்காதது போன்ற பிரசனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1915 ஊர்ப்புற நூலகங்களை கிளை நிர்வாக நிலையங்களாக தரம் உயர்த்தவும், வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றவும் அவர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் மற்றும் பரிந்துரைகள் வழங்கியுள்ளனர்.
நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டங்கள் கோவை, மதுரை, விழுப்புரம் ஆகிய மூன்று மண்டலங்களில் ஒரே நேரத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 200 ஊர்ப்புற நூலகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த உண்ணாவிரதத்தில் மாநில நிர்வாகிகள் ஸ்ரீதரன், நாகராஜன், கலைச்செல்வன், நீலகிரி ஆனந்த், ஈரோடு கணேசன், தண்டாயுதபாணி, திருப்பூர் கோபால் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் பிரபு, யுவராஜ், காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.