தஞ்சாவூர், ஜூலை 31 –
மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்யக்கோரி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனை முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனுக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய வேண்டும். மக்களவை உறுப்பினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலர் வடிவேலன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் சின்னை பாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலர் ஜெயினுலாப்தீன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் பி.ஜி. ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகி வயலூர் ராமநாதன், மக்கள் நீதி மையம் மாவட்ட பொறுப்பாளர் தர்ம சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், கலைச்செல்வி, மாதர் சங்க மாவட்ட செயலர் வசந்தி, மாணவர் சங்க மாவட்ட செயலர் ஹரிஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.