விளாத்திகுளம், ஜூலை 29 –
விளாத்திகுளத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு திருமணமாகாத பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டும் பெண்கள் அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் வாங்கி வேண்டுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு மீனாட்சி அம்மனுக்கு 5000 வளையல் பூட்டும் விழா நடைபெற்றது. அதற்கு முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், தயிர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ரோஜா, மல்லிகை, மரிக்கொழுந்து, முல்லை உள்ளிட்ட வண்ண மலர்களைக் கொண்டு அம்மனுக்கு அலங்கரிக்கப்பட்டு பஞ்சமுக மற்றும் சிறப்பு தீபாதாரனை நடைபெற்றது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்ட அம்மன் முன்பாக இரண்டு சிறுமிகளுக்கு வளையல் அணிவிக்கப்பட்டது. இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.