தென்தாமரை குளம், ஜூலை 28 –
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பொற்றையடி அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் பொதுமக்கள் தங்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை ஒரே இடத்தில் பெறுவதற்கு ஏற்ற வகையில் நேற்று அகஸ்தீஸ்வரம் வட்டம் வடக்கு தாமரைகுளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையும் வகையில் பொற்றையடி அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை ஊராட்சி உதவி இயக்குனர் அன்பு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் முருகன் கலந்து கொண்டு பட்டாக்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நீலபாலகிருஷ்ணன், புஷ்பரதி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த விஜயன், வடக்கு தாமரை குளம் ஊராட்சி செயலாளர் தங்க ரெத்தினம், கரும்பாட்டூர் ஊராட்சி செயலாளர் காளியப்பன், வடக்கு தாமரைகுளம் ஊராட்சி முன்னாள் தலைவர் ஆறுமுகம் பிள்ளை மற்றும் அரசு துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று மனுக்களை பெற்றனர். இதில் மொத்தம் 200 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் தகுதியானவர்களுக்கு மின் இணைப்பு, பெயர் மாற்றம், பட்டா, ஒ.பி.சி சான்றிதழ், ரேஷன் கார்டு பெயர் மாற்றம், நல வாரிய அட்டைகள் உள்ளிட்டவைகள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மீதமுள்ள கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணப்படும் எனவும், தகுதியான விண்ணப்பங்களுக்கு 45 தினங்களுக்குள் பதில் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.