தருமபுரி, ஜூலை 03 –
தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: சமீப காலமாக பாட்டாளி மக்கள் கட்சியில் சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. சேலத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி எம்எல்ஏ அருள் டாக்டர் அன்புமணி ராமதாஸை வேண்டாத வார்த்தைகளால் பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அன்புமணி ராமதாஸ் இல்லை என்றால் அருள் இல்லை. அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து பல்வேறு சாதனைகளை படைத்தவர். உலக அளவில் பாராட்டுகளை பெற்றவர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூண்டுதல் படி பாட்டாளி மக்கள் கட்சியை உடைக்க வேண்டும். பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அருள் இப்படி பேசி இருக்கிறார். டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே உள்ள விரிசல், உரசல் நின்று விட வேண்டும். டாக்டர் ராமதாஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். பாமகவின் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு மூன்று பேர் காரணம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். அந்த மூணு பேரில் ஒருவர் அருள் என்பது அவருடைய பேச்சின் மூலம் வெளிப்படையாக தெரிகிறது. வருகின்ற சட்ட சபை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற முடியாது. இதனால் எதிரிகளை பலவீனப்படுத்த வேண்டும் என்ற திமுகவின் முயற்சிக்கு அருள் துணை போகிறார்.
பாமக பெரியாரை பின்பற்றும் சுயமரியாதை இயக்கம். அந்த இயக்கத்தைச் சேர்ந்த அருள் ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி தலைவர்களின் காலில் விழுவது சுயமரியாதைக்கு எதிரானது. அவர் மீது டாக்டர் அன்புமணி ராமதாஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம், மாநில துணைத்தலைவர்கள் செல்வம், சாந்தமூர்த்தி, மாநில அமைப்பு செயலாளர்கள் சண்முகம், இளைஞர் சங்க மாநிலச் செயலாளர் முருகசாமி, பசுமை தாயக மாநிலத் துணைச் செயலாளர் மாது, மாவட்ட துணை தலைவர் அல்லி முத்து, மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சேட்டு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.