ஈரோடு, ஜூன் 30 –
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தலைவர் வி.கே. ராஜமாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: ஈரோட்டில் மாநகராட்சி தீர்மானத்தின் படி குறு நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 500 முதல் ரூ. 40 ஆயிரம் வரை தொழில் உரிம கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாநகராட்சி மூலம் சொத்துவரி, குப்பை வரி, பாதாள சாக்கடை வரி, குடிநீர் வரி என பல பிரிவுகளில் வரி வசூல் செய்யப்படுகிறது. 2024-ம் ஆண்டு முதல் இந்த வரி இனங்கள் 6 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகின்றன.
எனவே முதல்-அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுத்து சிறு, குறு வணிக நிறுவனங்களுக்கு தொழில் வரி மற்றும் தொழில் உரிமக் கட்டணம் ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் வணிகம் செய்யும் நிறுவனங்களால் நேரடியாக கடை வைத்து வியாபாரம் செய்யும் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
ஆன்லைன் வணிகநிறுவனங்கள் எந்த ஒரு வரியையும் மாநகராட்சிக்கு செலுத்துவதில்லை. ஆனால் நேரடி வியாபாரம் செய்யும் வணிகர்கள் அனைத்து வகை வரிகளையும் செலுத்தி நொடிந்து போகிறார்கள். எனவே வணிகர்களை பாதுகாக்க முதல்-அமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.