குளச்சல், ஜூன் 19 –
வில்லுக்குறி அருகே மாடத்தட்டுவிளை என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஜெனிஸ்மோன். யூடியூபர் ஆன இவர் பி.எஸ்சி.,பி.எட்., பட்டதாரி. இவர் தனது தந்தை ஜாண்பேட்ரிக்குடன் சேர்ந்து சமுதாயத்தில் நிலவுகின்ற மூடநம்பிக்கைகள், வரதட்சணை கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு வீடியோக்கள் பதிவு செய்து மக்களிடம் கொண்டு செல்வது வழக்கம். இவர்கள் சமீபத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஸ்டாலின் அறிவித்திருந்த ஹெல்மெட் விழிப்புணர்வு சம்பந்தமாக விழிப்புணர்வு வீடியோ பதிவிட்டு இருந்தனர். இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கடந்த காலங்களில் செய்த விழிப்புணர்வு வீடியோ மற்றும் சமீபத்தில் வெளியிட்டிருந்த ஹெல்மெட் பிரச்சார வீடியோக்களைப் பார்வையிட்ட மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தந்தை, மகன் இருவரையும் பாராட்டும் விதமாக நேரடியாக அவர்களை அழைத்து சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவப்படுத்தினார்.