தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சிறுபான்மையினருக்கான கலந்தாய்வு கூட்டம் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் சொ.ஜோ. அருள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ், மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவர் அப்துல் குத்தூஸ், சிறுபான்மையின் நல துணை இயக்குனர் ஷர்மினி ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் சிறுபான்மையினரின் மக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதுவரை பெறப்பட்ட 680 கோரிக்கை மனுக்களில் 530 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகளை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை மக்களின் ஆலய வழிபாட்டிற்கும், ஆலயங்களுக்கும் அச்சுறுத்தல் உள்ளதாக அளிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்து போலீசார்உரிய பாதுகாப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்கூட்டத்தின் 45 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.உரிய தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கி இருக்கிறோம். இக்கோரிக்கைகள் மீது 15 நாட்களில் தீர்வு காணப்படும். சிறுபான்மையினருடைய வாழ்வாதாரம், வாழ்க்கைத் தரம், பொருளாதாரம் எப்படி இருக்கின்றது என்பது குறித்தும், சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்தும் ஆய்வு செய்து சிறுபான்மையினரின் முக்கிய கோரிக்கைகள் உரிய பரிந்துரைகளை உள்ளடங்கிய அறிக்கையை விரைவில் முதலமைச்சரை சந்தித்து சமர்ப்பிக்க உள்ளோம் என்று ஆணைய தலைவர்தெரிவித்தார். இந்தக் கூட்டத்தின் மொத்தம் 123 பயனாளிகளுக்கு ரூ.19.60 லட்சம் மதிப்பில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். இதில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



