நாகர்கோவில் மார்ச் 19
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் மீன்வளத்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவித்திருப்பதாவது :-
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகமானது தமிழ்நாட்டின் முக்கிய மீன்பிடித் துறைமுகங்களில் ஒன்றாகும். இத்துறைமுகமானது தாமிரபரணி ஆற்றின் முகத்துவார பகுதியில் அமைந்துள்ளது. இத்துறைமுகத்தில் 320 விசைப்படகுகளும், 2000 நாட்டுப்படகுகளும் பாதுகாப்பாக நிறுத்திடவும் மற்றும் மீன்களை கையாளவும் தேவையான கட்டுமான பணிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்துறைமுகத்தின் மூலம் 8000 மீனவர்கள் நேரடியாகவும் 12,000 மீனவர்கள் மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனர்.
இத்துறைமுகத்தின் இரயுமன்துறை பகுதி விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இக்கட்டுமான பகுதியின் அருகாமையில் அமைந்துள்ள இரயுமன்துறை மீனவகிராமத்தை பாதுகாத்திடவும், அக்கிராம மீனவ மக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி விட்டு மீன்பிடித்துறைமுக விரிவாக்க பணிகளை மேற்கொண்டிட கேட்டு அம்மீனவ கிராம பிரதிநிதிகள் மூலமாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவ்வழக்கினை விரைந்து முடித்திடவும், தமிழ்நாடு முதலமைச்சரின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான இத்துறைமுக விரிவாக்க பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் சின்னகுப்பன். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர். கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர், துறை சார்ந்த அலுவலர்கள், மீன்பிடித்துறைமுக திட்ட கோட்ட பொறியாளர்கள் உட்பட கலந்து கொண்டார்கள்.