மயிலாடுதுறை அங்காளம்மன் குளம் பராமரிப்புக்காக சேவை அமைப்பிடம் ஒப்படைப்பு:-
மயிலாடுதுறை நகராட்சி பகுதிக்குட்பட்ட இடங்களில் 70-க்கு மேற்பட்ட குளங்கள் இருந்த நிலையில், அதில் பல குளங்கள் ஆக்கிரமிப்பு காரணமாக உபயோகம் இன்றி உள்ளது. இந்நிலையில், நகரின் குடிநீர் ஆதாரத்தை காக்கும் விதமாக 2021-2022-ஆம் ஆண்டில் நகராட்சியில் உள்ள 12 குளங்கள் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பொதுமக்கள் நடைபயிற்சி செல்லும் வகையில், சுற்றுச்சுவர் ஆகிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டன. இவற்றில் ஒரு சில குளங்களைத் தவிர மற்ற குளங்களை பொதுமக்கள் நடைபயிற்சி செல்ல பயன்படுத்துவதில்லை. இதனால் பல லட்சம் செலவு செய்து சீரமைத்தும், அக்குளங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது. இந்நிலையில், இக்குளங்களின் பராமரிப்பை தன்னார்வலர்கள், சேவை அமைப்பினரிடம் வழங்க நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது. இதன் முதல்கட்டமாக நகராட்சி 25-வது வார்டில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரில் அமைந்துள்ள அங்காளம்மன் குளத்தின் பராமரிப்பை மயிலாடுதுறை தமிழ்ச் சங்கம் மற்றும் ஜெனிபர் இனிப்பகம் இணைந்து ஏற்றன. இதையடுத்து குளத்தின் சாவியை மயிலாடுதுறை தமிழ்ச்சங்க நிறுவனர் ஜெனிபர் பவுல்ராஜிடம் நகராட்சி தலைவர் செல்வராஜ் ஒப்படைத்தார். அப்போது, துணைத்தலைவர் சிவக்குமார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.