சென்னை, அடையாறில் நவீன வசதிகளுடன் கூடிய மாதிரி சார்பதிவாளர் அலுவலகம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. அடையாறு சார்பதிவகம் கடந்த 1982 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் மொத்தம் 4,955 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் ரூ.295.53 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் இதுவரை 3,680 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் ரூ.190.57 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக திருவான்மியூர், எல் பி ரோடு காமராஜ் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கட்டடத்தில் முதல் முறையாக நவீன வசதிகளுடன் கூடிய மாதிரி சார்பதிவாளர் அலுவலகம் (அடையார் சார்பதிவாளர் அலுவலகம்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை தமிழக அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதில் உள்ள சிறப்பம்சங்கள் குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறைகள், தேவையான இருக்கை வசதிகள், வைஃபை ( WiFi) இணைய வசதிகள், மொபைல் சார்ஜிங் யூனிட் நூலக வசதி தூய்மையான குடிநீர் வசதி மாற்றுதிறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்கான பிரத்யேக வசதிகள், தூய்மையான கழிவறைகள் மின்தூக்கி வாகனம் நிறுத்துமிடங்கள், மின்னணு நுழைவு அட்டை அடிப்படையில் பதிவு அறையில் ஆவணதாரர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் அதிகபட்சம் 10 நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படும் வகையில் நுழைவு வசதி , நவீனவசதிகளுடன் கூடிய பணி அறைகள் ( Work Stations) உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் வேளச்சேரி எம்எல்ஏ அசன் மவுலானா அரவிந்த் ரமேஷ், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே மற்றும் பதிவு துறையின் உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.



