புதுக்கடை, டிச.13-
நீர்ப்பாசனத் துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தை அத்துமீறி ஆக்கிரமித்து மதில் சுவர் எழுப்பி வரும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு இனயம்புத்தன்துறை கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பேருராட்சி கவுன்சிலர் சத்தியாகிரக போராட்டம் நடத்தினார்.
இனயம் புத்தன்துறை கிராமத்துக்கு உட்பட்ட காவு உடவிளை சாலையில் நீர்ப்பாசனத்திற்கு சொந்தமான ஓடையில் அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து காம்பவுண்ட் சுவர் எழுப்பி வருகின்றனர். இதை தடை செய்ய கேட்டு கீழ்குளம் பேரூராட்சி கவுன்சிலர் எமில் ஜெபசிங் என்பவர் அரசுக்கு மனு அனுப்பி உள்ளார். ஆனால் அரசு நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து, இனயம் புத்தன்துறை கிராம அலுவலகம் முன்பு நேற்று தனி ஒரு மனிதனாக சத்தியாகிரக போராட்டம் நடத்தினார். மழை பெய்ததால் குடை பிடித்து சத்தியாகிரப் போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து போராட்டம் நடந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.