கிருஷ்ணகிரி. நவ.27. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கபட்டது. இதில் எலும்பியல் பிரிவு தொடங்கிய இரண்டு ஆண்டுகளில், 100 வது நவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். இதனை அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளுடன் மருத்துவக் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். 100வது நவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை என்பது கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மற்றுமொரு புதிய மைல்கல், தனியார் மருத்துவமனையில் நவீன மூட்டு மாற்று அறுவை செய்வதற்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவாகும். ஆனால் அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் இலவசமாக செய்யபட்டு வருகிறது என்றும், பொதுமக்கள் சாலை விபத்து மற்றும் விளையாட்டு காயங்களால், மூட்டு பகுதி சவ்வு கிழிந்து அவதிப்படும் பட்சத்தில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும், கால் மூட்டுகளில் முன்புற இணைக்கும் தசைநார் அறுவை சிகிச்சை, பின்புற இணைக்கும் தசைநாற் அறுவை சிகிச்சை, மற்றும் மெனிஸ்கஸ், போன்ற சவ்வு பிரச்சனைகளுக்கும், தோள்பட்டை வலி, அடிக்கடி மூட்டு விலகுதல், மற்றும் தோள்பட்டை சவ்வு கிழிந்த நபர்களுக்கு, எலும்பு முறிவு சிகிச்சையை சிறப்பு மருத்துவ நிபுணர்களைக் கொண்டு அதிநவீன அறுவை சிகிச்சை செய்யப்படுவதாகவும், தனியார் மருத்துவமனைக்கு ஈடாக அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை இல்லாமல் நவீன முறையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வழங்குவது இந்த மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது என எலும்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் செந்தில் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் பூவதி, மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் சந்திரசேகரன், உள்ளிட்ட எலும்பு முறிவு பிரிவில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளிட்ட ஏராளமானவர்கள் உடன் இருந்தனர். அரசு மருத்துவமனையில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மூலமாக எங்களுக்கு மீண்டும் சராசரி வாழ்வு கிடைத்ததாக பயனாளிகள் தெரிவித்தனர். இறுதியாக சிறப்பாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் பூவதி நினைவு பரிசு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.



