அரியலூர், நவ;22
தமிழ்நாடு முதலமைச்சர் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு வட்டத்தை தேர்ந்தெடுத்து அவ்வட்டத்தில் உள்ள கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்து துறை மாவட்ட நிலை அலுவலர்கள் தம் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் அரியலூர் வட்டம் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் மாவட்ட நிலை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி மாவட்ட ஆட்சித்தலைவர் அரியலூர் நகராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பாதாள சாக்கடை திட்டம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து, சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து கீழப்பழுவூர் ஊராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களை பார்வையிட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள குடியிருப்புகளின் எண்ணிக்கை, குடியிருப்பவர்களின் எண்ணிக்கை விவரம் குறித்து ஆய்வு செய்ததுடன் குடியிருப்பில் உள்ள வசதிகள் குறித்தும் குடியிருப்பவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பண்ணையினை பார்வையிட்டு பல்வேறு பயிர்கள் நாற்றாங்கால் உற்பத்தி செய்யப்படும் முறைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, கீழப்பழுர் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தொடர் காற்று தர கண்காணிப்பு நிலையத்தினை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து கீழப்பழுவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை, இதுவரை வழங்கப்பட்டுள்ள கடன்கள் விபரம், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் விபரங்கள், வைப்புத் தொகை விபரம் ஆகியவற்றை கேட்டறிந்ததுடன், இ-சேவை மையத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கீழப்பழுவூர் கால்நடை மருந்தகத்தினை பார்வையிட்டு சினை மருந்து கையிருப்பு, ஏனைய கால்நடை மருந்துகள் கையிருப்பு, கால்நடைகளுக்கான தாது உப்பு கலவை இருப்பு விவரம், பதிவேடுகள் விவரம், கால்நடைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர், கீழப்பழுவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினைப் பார்வையிட்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், இருப்பில் உள்ள மருந்து மாத்திரைகள், செவிலியர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் கேட்டறிந்துடன், கர்ப்பிணி தாய்மார்களின் உடல்நலத்தினை தொடர்ந்து கண்காணித்து உரிய மருத்துவசேவைகளை வழங்கிட வேண்டுமென சம்மந்தப்பட்ட மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் சிகிக்சைக்காக வருகைபுரிந்த பொதுமக்களிடம் மருத்துவ சிகிச்சைகள் முறையாக வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார். தொடர்ந்து கீழையூர் கிராமத்தில் உள்ள இரட்டை கோயில் ஆலயத்தினை பார்வையிட்டு அதன் தொன்மை குறித்து கேட்டறிந்ததுடன், ஆலயத்தினை தொடர்ந்து தூய்மையாக பராமரித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து கீழையூர் கிராமத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் விவசாயி அப்பாதுரை என்பவருக்கு அமைத்து தரப்பட்டுள்ள வெங்காயம் சேமிப்பு கிடங்கினை நிலத்திற்கே சென்று பார்வையிட்டு அவற்றின் தரம், சேமிக்கப்பட்டுள்ள அளவுகள், விற்பனை செய்யப்படும் முறைகள் ஆகியவை குறித்து கேட்டறிந்ததுடன், தற்போது மிளகாய் பயிரிடப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து, கீழப்பழுவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் திறந்தவெளி அரங்கத்திற்கான மேற்கூரை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு பணிகளின் தற்போதைய நிலை, கட்டுமான பொருட்களின் தரம், பணி முடிவடையும் காலம் உள்ளிட்ட தகவல்கள் குறித்து கேட்டறிந்ததுடன், மாணவர்களுக்கு உணவு தயார் செய்யும் சமையல் கூடத்தினை பார்வையிட்டு சமையல் இருப்பு பொருட்களின் விவரம், மாணவர்களின் எண்ணிக்கை, உணவுப்பட்டியல் ஆகியவை குறித்து ஆய்வு செய்து, உணவினை மாணவர்களுக்கு உரிய நேரத்தில் தயார் செய்து போதிய அளவில் வழங்கிட வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை பார்வையிட்டு அலுவலர்களின் பணி விவரங்கள் குறித்தும்;, பணியாளர்களின் எண்ணிக்கை குறித்தும், ஊராட்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட மேம்பாட்டு பணிகளின் நிலை குறித்தும், கணினியில் பதிவேற்றம் செய்யப்படுவது தொடர்பாகவும் கேட்டறிந்து;, வளர்ச்சித்திட்ட பணிகளை தொடர்ந்து கண்காணித்திட வேண்டுமென சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு சுகாதார நிலையத்திற்கு வருகைதரும் நோயாளிகளின் எண்ணிக்கை, மருத்துவர்கள், கிராம செவிலியர்கள் எண்ணிக்கை, மருத்துவ பணியாளர்கள் எண்ணிக்கை விவரம், சுகாதார நிலையத்தில் வழங்கப்படும் சிகிக்சைகள், சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு, இருப்பில் உள்ள மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், காலை முதல் அரியலூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட நிலை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட நிலை அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்த ஆய்வறிக்கையினை சமர்ப்பித்திடவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பான 76 மனுக்கள் பெறப்பட்டது.
இவ்வாய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, மாவட்ட நிலை அலுவலர்கள், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட உடனிருந்தனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்