திருப்பூர் ஜூலை 15. கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் உலக மக்கள் தொகையை தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு உறுதிமொழி கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் ஏற்றுக்கொண்டனர்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
1987ம் ஆண்டு ஜீலை 11 உலக மக்கள் தொகை 500 கோடியை தாண்டியது என்ற அபாயத்தை உலக மக்களுக்கு உணர்த்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை அந்நாளை உலக மக்கள் தொகை தின நாளாக அறிவித்தது. அது முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜீலை 11 ம் தேதி உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான உலக மக்கள் தொகை தினத்தின் மையக்கருத்தாக “ஒவ்வொரு தம்பதியரின் பெருமை குடும்பநலம் அதுவே வளர்ந்த இந்தியாவின் புதிய அடையாளம்” ஆகும். உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் நமது தாய்நாட்டின் மொத்த மேம்பாட்டிற்கும். தாய்மார்களின் நல்வாழ்விற்கும். குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் மக்கள் தொகை பெருக்கத்தினைக் கட்டுப்பத்துதல் முதன்மையானதும், முக்கியமானதும் ஆகும் என்பதை நான் அறிந்துள்ளேன்.
சிறு குடும்ப நெறி, திருமணத்திற்கேற்ற வயது முதல் குழந்தையை தாமதப்படுத்த மேற்கொள்ள வேண்டிய குடும்ப நலமுறைகள். முதல் குழந்தைக்கும், 2வது குழந்தைக்கும் இடையே தேவையான இடைவெளி. ஒரு பெண் கருவுற்ற காலத்தில் வீட்டில் மேற்கொள்ள வேண்டிய சாதகமான சூழ்நிலையை உருவாக்குதல், தாய் சேய் நலத்தை பாதுகாத்தல், பெண் கல்வியை மென்மேலும் ஊக்குவித்தல், ஆணும் பெண்ணும் சமம் என்பதற்கு செயல் வடிவம் கொடுத்தல். பெண் சிசுக் கொலையை தடுத்தல், இளம் வயது திருமணத்தை தடுத்தல், இளம் வயது கர்ப்பத்தை தடுத்தல்.
மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் தாக்கத்தை குறைத்தல், சுற்றுப்புற சூழல் பாதிப்பை தடுத்தல், மரம் வளர்ப்பதை ஊக்குவித்தல், வறுமை ஒழிப்பு போன்ற செய்திகளை அனைவருக்கும் எடுத்துக் கூறுவதில் என்னை நான் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வேன் என உறுதி அளிக்கிறேன். குடும்பநலத்திட்டங்களை மக்கள் இயக்கமாக மலரச் செய்ய என்னை நான் முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வேன் எனவும் உறுதியளிக்கிறேன். இந்த முயற்சிகள் வெற்றியடைய இயற்கை எனக்கு துணை நிற்கட்டும் என உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து பழனியாம்மாள் மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவியர்கள், தாராபுரம் பிசப்ஸ் செவிலியர் கல்லூரி, ரேவதி செவிலியர் கல்லூரி, தாராபுரம் சாரா செவிலியர் கல்லூரிகளைச் சேர்ந்த 100 மாணவர்களைக் கொண்டு மக்கள் தொகை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர் மற்றும் பதாகைகளுடன் பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி தென்னம்பாளையம் மாநகராட்சி பள்ளிக்கு வந்தடைந்தது.
இதன் பின்னர் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் வழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய மஞ்சப்பை மற்றும் துண்டு பிரசுரங்களை கலெக்டர் கி றிஸ்துராஜ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் முருகேசன், இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) (பொ) ராமசாமி. துணை இயக்குநர்கள் (குடும்பநலம்) மரு.மு.கௌரி, (சுகாதாரப்பணிகள்) முரளிசங்கர், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சாம்சாந்தகுமார், திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துறைத்தலைவர் (மகப்பேறு பிரிவு) மேகானசுந்தரி. விரிவாக்க கல்வியாளர் ராணி, மாவட்ட புள்ளி விவர உதவியாளர் பிரபாகர். வட்டார சுகாதார புள்ளியியலாளர்கள் மற்றும் மாவட்ட குடும்பநலச்செயலக அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், மருத்துவர்கள். செவிலியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



