முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். சினிமாவில் கதாநாயகனாக இருந்தவர் நிஜத்திலும் அப்படித்தான் இருப்பார் என நினைத்து சில லட்சம் பேர் செய்த தவறு, ஒட்டுமொத்த மக்களையும் தற்போது பாதித்துக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு குறித்து சரமாரி குற்றச்சாட்டு!
தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். குற்றவாளிகளுக்கு அரசின் மீது பயமில்லை என்றும், தவெக நிர்வாகிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
விலைவாசி உயர்வு, மின்சாரக் கொள்முதல் குறித்தும் விமர்சனம்!
சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மட்டுமின்றி, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றமும் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மின்சாரக் கொள்முதல் விலை தொடர்பாகவும் தவெக அரசின் செயல்பாடுகளைக் கேள்வி எழுப்பிய அவர், நிர்வாகத் திறன் மற்றும் திட்டமிடல் இல்லாததே தற்போதைய பிரச்சினைகளுக்குக் காரணம் என விமர்சித்துள்ளார்.
நாளை தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்!
இந்தப் பிரச்சினைகளைக் கண்டித்து அக்டோபர் 31-ம் தேதி சென்னையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையிலும், மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டம் தவெக அரசுக்கான ‘Wake-Up Call’ என்றும், முதலமைச்சரையும் ஆட்சி நிர்வாகத்தையும் விழித்தெழச் செய்யும் வகையில் போராட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.


