தென்காசி, அக். 6:
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லூரணி ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றக்கூடாது என்றும், கல்லூரணி ஊராட்சியாகவே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கல்லூரணி ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ள நிலையில், இந்தப் பகுதிகளை உள்ளடக்கி பாவூர்சத்திரம் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சின்னதம்பிநாடார்பட்டி, கல்லூரணி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் என அவர்கள் கூறினர்.
சின்னதம்பிநாடார்பட்டி மற்றும் கல்லூரணி பகுதி மக்கள் பெரும்பாலும் கூலி தொழிலாளர்களாகவும், பனை ஏறும் தொழில் மற்றும் பீடி சுற்றும் தொழிலை நம்பியவர்களாகவும் உள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இந்த கிராமப்புற பகுதிகள் பேரூராட்சியாக மாற்றப்பட்டால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் சின்னதம்பிநாடார்பட்டி மற்றும் கல்லூரணி கிராமப் பகுதிகளை உள்ளடக்கிய கல்லூரணி ஊராட்சியை தொடர்ந்து ஊராட்சியாகவே செயல்படச் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பேரூராட்சியாக மாற்றுவது கட்டாயம் என்றால், கல்லூரணி ஊராட்சியில் பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள பாவூர்சத்திரம், செட்டியூர், குருசாமிபுரம், செல்வ விநாயகபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 10 வார்டுகளை இணைத்து பாவூர்சத்திரம் பேரூராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த கோரிக்கை மனுவை சமூக ஆர்வலர் வைரசாமி தலைமையில் ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தனர். இதில் ஊர் நிர்வாகிகள் வேல்சாமிநாடார், ராஜீவ்காந்தி, தனசிங், செல்லமணிநாடார், ஐசக், செல்லத்துரை, முருகன், அழகர், மகேஸ்வரன், சாய்சிங், ஜெயராமன், சரவணன், திலீபன், ராஜலிங்கம், குமரேசன், முப்புடாதிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



