திருப்பூர், செப்.23:
தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மனிஷ் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது.
தாராபுரம் தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஏற்கனவே 384 இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 233 இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு முடிந்துள்ளது. மீதமுள்ள 151 இயந்திரங்களின் சரிபார்ப்பு பணி நேற்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வருகைக்காக அரசியல் கட்சி பிரதிநிதிகள் சிலர் காத்திருந்தனர். பின்னர் கலெக்டர் இயந்திரங்களை பார்வையிட்டு சென்றதாகவும், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் சில அரசியல் கட்சி பிரதிநிதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.



