சென்னை | செப். 23: இந்தியாவின் முன்னணி சர்க்கரை நோய் நிபுணரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான டாக்டர் வி. மோகனுக்கு அமெரிக்காவின் நியூஜெர்சி மாநில செனட் மற்றும் சட்டசபை சார்பில் சிறப்பு கௌரவம் வழங்கப்பட்டது. நியூஜெர்சி மாநில செனட்டர் வின் கோபால், டாக்டர் வி. மோகனிடம் இந்த தீர்மானத்தை வழங்கினார்.
சர்க்கரை நோய் தொடர்பாக டாக்டர் வி. மோகன் 1,900-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளதாகவும், அவை 2.6 லட்சத்துக்கும் அதிகமான முறை மேற்கோள் காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்காக 25,000-க்கும் மேற்பட்ட இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம்கள் மற்றும் மருத்துவ சேவைகள் வழங்கியதையும் நியூஜெர்சி சட்டசபை பாராட்டியுள்ளது.
இந்த கௌரவம் சர்க்கரை நோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையில் இந்தியாவின் பங்களிப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் என டாக்டர் வி. மோகன் தெரிவித்துள்ளார். சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல், தடுப்பு மற்றும் அனைவருக்கும் தரமான சிகிச்சை கிடைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



