திருப்பூர் | செப்.18:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கியது. மாவட்ட கலெக்டர் மனிஷ் குத்துவிளக்கேற்றி விற்பனையை தொடங்கி வைத்தார்.
தீபாவளியை முன்னிட்டு புதிய ரகங்கள் மற்றும் பல்வேறு வடிவமைப்புகளில் சேலைகள், சட்டைகள், குர்த்தீஸ்கள், ரெடிமேட் ஆடைகள் உள்ளிட்டவை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஞாயிறு உள்ளிட்ட அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாதம் ரூ.300 முதல் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 11 மாதங்கள் சந்தா செலுத்தினால் 12-வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்துவதுடன், சேமிப்புத் திட்ட வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு முழுவதும் 30% சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
கடந்த தீபாவளியில் திருப்பூர் விற்பனை நிலையத்தில் ரூ.66.17 லட்சமும், உடுமலையில் ரூ.31.18 லட்சமும் விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு திருப்பூரில் ரூ.80 லட்சம், உடுமலையில் ரூ.40 லட்சம் என மொத்தம் ரூ.1.20 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



