தென்காசி, செப்.15:
தென்காசியில் TAF IAS Academy சார்பில் ‘ஈதல் இதயம்’ அறக்கட்டளை தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. நிறுவனத் தலைவர் ஆகாசமூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் மாரியப்பன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், முன்னாள் காவல்துறை தலைவர் முனைவர் சைலேந்திரபாபு IPS சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அறக்கட்டளையை தொடங்கி வைத்தார்.
விழாவில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த ஓய்வுபெற்ற தொழிற் கூட்டுறவு அலுவலர் தோழர் துரைசிங்கிற்கு ‘சிறந்த சமூக சேவகர்’ விருது வழங்கி சைலேந்திரபாபு IPS கௌரவித்தார்.
துரைசிங்கர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளராகவும், தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளர் சங்கத்தின் முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளராகவும், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் முன்னாள் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் தங்கராஜ், கல்லூரி பேராசிரியர் டாக்டர் பால் மகேஷ், ஆடிட்டர் சரவணன் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
200-க்கும் மேற்பட்ட அரசு பணியாளர் சாதனையாளர்களுக்கு பாராட்டு
TAF IAS Academy மூலம் பயிற்சி பெற்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு துறைகளில் பணியாற்றி வரும் 200-க்கும் மேற்பட்ட சாதனையாளர்களுக்கு விழாவில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அரசுப் பணியில் சாதித்த இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், சமூக சேவையில் சிறப்பாக செயல்படுபவர்களை கௌரவிக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சி அமைந்தது. இலஞ்சி பள்ளி அறிவியல் ஆசிரியர் சுரேஷ்குமார் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை வேல்கனி தொகுத்து வழங்கினார். விழாவின் நிறைவில் அப்துல்லா நன்றியுரை வழங்கினார்.



