கல்வீச்சில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் காயம்
விளாத்திகுளம், செப்.14:
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே இலந்தைகுளம் மற்றும் இலக்கம்பட்டி கிராமங்களுக்கு இடையே உள்ள அரசு பட்டா புறம்போக்கு இடத்தில் இரு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கபடி விளையாடுவது வழக்கம். இந்த இடத்திற்கு இரு கிராம மக்களும் உரிமை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மாறி மாறி மனு அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இலக்கம்பட்டி இளைஞர்கள் கபடி விளையாடிக் கொண்டிருந்தபோது, இலந்தைகுளம் இளைஞர்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. தொடர்ந்து, அங்கு கிடந்த கற்களை எடுத்து இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. மோதலை தடுக்கச் சென்ற விளாத்திகுளம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கோபால் உள்ளிட்ட 5 போலீசாரும் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டது.
காயமடைந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் எட்டையாபுரம், கோவில்பட்டி, விளாத்திகுளம், தூத்துக்குடி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து திருநெல்வேலி சரக டிஐஜி திருநாவுக்கரசு மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி சிவப்பிரசாத் ஆகியோர் இரு கிராமங்களுக்கும் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், இரு கிராமங்களைச் சேர்ந்த தலா 20 பேர் வீதம் மொத்தம் 41 பேர் மீது விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இரு கிராமங்களிலும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதையடுத்து, வஜ்ரா வாகனம், தீயணைப்புத் துறை வாகனம், விரைவுப்படை வாகனம் உள்ளிட்டவற்றுடன் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த இடம் தொடர்பாக கடந்த 6 மாதங்களாக சட்டம்-ஒழுங்கு பிரச்சனை இருந்து வந்த நிலையில், வருவாய்த்துறை உரிய நடவடிக்கை எடுக்காததே தற்போதைய பதற்றத்துக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



