தட்டிக் கேட்ட பொதுமக்கள், போலீசாரை தாக்கியதாக 43 பேர் மீது வழக்கு பதிவு
புதுக்கடை, செப். 12-
புதுக்கடை அருகே வேங்கோடு என்ற இடத்தில் புனித சவேரியார் தேவாலயம் உள்ளது. மிக பழமையான இந்த ஆலயத்தின் பெயரில் அதே பகுதி வெள்ளையம்பலம் என்ற இடத்தில் ஆலயத்தின் பெயரில் எரளாம் சொத்துக்கள் உள்ளது. இது முன்னோர்கள் வேங்கோடு ஆலயத்திற்கு தானமாக வழங்கியதாக தெரிகிறது. தற்பொழுது இந்த சொத்து வேங்கோடு சவேரியார் ஆலயத்தின் பெயரில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த சொத்துக்களை மறை மாவட்டத்தின் பெயரில் மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று முன்தினம் வேங்கோடு சவேரியார் ஆலய வளாகத்தில் வந்து குவிந்து ஆலய சொத்தை வேறு பெயருக்கு மாற்றக்கூடாது என கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆலயத்தின் முன்பு தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆலய பங்கு பணியாளர் ஜீசஸ் ரைமண்ட் என்பவரை சிறை பிடித்தனர். உடனடியாக ஆலய பங்கு பணியாளர் சார்பில் புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புதுக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மக்களால் சிறைபிடிக்கப்பட்ட வேங்கோடு பங்கு பணியாளர் ஜீசஸ் ரைமண்ட் என்பவரை புதுக்கடை போலீசார் மீட்க முயன்றனர். இதில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் (48) என்பவர் தலைமையில் 10 பெண்கள் உட்பட சுமார் 43 பேர் சேர்ந்து போலீசாரை அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி, கெட்ட வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக புதுக்கடை போலீசார் பொதுமக்கள் 43 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆலய சொத்து சம்மந்தமான போராடிய பொது மக்கள் மீதே புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



