“விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் – 2027”
தருமபுரி, செப்.8-
தருமபுரி மாவட்டத்தில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்காக இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மை பாரத் (MY Bharat) சார்பில், “விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் – 2027” நிகழ்வுக்கான ஆன்லைன் வினாடி வினா போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் சிறப்பாக செயல்பட்டு தேர்வு செய்யப்படும் இளைஞர்கள், 2027 ஜனவரி 10 முதல் 12-ஆம் தேதி வரை புதுதில்லியில் நடைபெறும் தேசிய இளையோர் திருவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். மேலும், தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு பிரதமரை நேரில் சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பும் கிடைக்கும்.
3 கட்டங்களாக தேர்வு
முதல் கட்டமாக MY Bharat இணையதளம் மூலம் ஆன்லைன் வினாடி வினா போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் தகுதியான பங்கேற்பாளர்கள், இரண்டாம் கட்டமாக ஆன்லைன் கட்டுரை எழுதும் போட்டியில் பங்கேற்பார்கள்.
இரண்டாம் கட்டத்தில் வெற்றி பெறுபவர்கள் மூன்றாம் கட்டமாக பி.பி.டி. (PPT) விளக்கக்காட்சி போட்டியில் பங்கேற்பார்கள். மூன்று கட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்டு தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் தேசிய இளையோர் திருவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
வினாடி வினா போட்டியில் பங்கேற்க MY Bharat இணையதளத்தில் பதிவு செய்யலாம். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆர்வத்துடன் பங்கேற்குமாறு மாவட்ட மை பாரத் இளைஞர் அலுவலர் சிவசண்முகம் தெரிவித்துள்ளார்.



