மார்த்தாண்டம், நவ. 25 –
மார்த்தாண்டம் அருகே முள்ளங்கினாவிளையை அடுத்த பாலக்கான் விலை சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மனைவி தங்க லீலா (60). கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த தங்கலீலா திடீரென மாயமானார். அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை அடுத்து தங்க லீலா மாயமானது குறித்து கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தங்க லீலாவை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை நட்டாலம் பகுதியில் உள்ள மதுர குளத்தில் ஒரு பெண்ணின் கை, பாசி அடைந்த தண்ணீரின் மேலே தெரிய வந்ததை அப்பகுதி மக்கள் கண்டு திடுக்கிட்டனர். இதை அடுத்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து தண்ணீரில் கிடந்த தங்க லீலாவை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
சுமார் 15 அடி ஆழத்தில் முட்டை பாசி படர்ந்த தண்ணீரில் இவர் எப்படி விழுந்தார்? என்பது தெரியவில்லை. தற்கொலையாக இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தங்க லீலாவின் உடலை போலீசார் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.



