திருவள்ளூர். ஆக.28.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே, வயல்வெளியில் முகம் ஆசிட் ஊற்றப்பட்டு சிதைக்கப்பட்ட நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த 40 வயது பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொட்டாரெட்டிக்குப்பம் பகுதியில் இன்று காலை பெண்ணின் சடலம் கிடந்ததைப் பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ஊத்துக்கோட்டை போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், உடல் அருகே கிடந்த செல்போனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் ஆந்திர மாநிலம் நாகலாபுரம் அருகே உள்ள நின்ரை, சவரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அருணா (40) என்பது தெரியவந்துள்ளது. தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை அருகே உள்ள வதட்டூர் கண்டிகையில் உறவினர் வீட்டுக்கு வந்திருந்த அவர், மர்ம நபர்களால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சொத்து தகராறு காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு காரணங்களுக்காக கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



