நாகர்கோவில், 22.08.2026
குமரி மாவட்டம் பூதப்பாண்டி அடுத்த ரத்தினபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி விக்டர் தாமஸின் மகன் கவின் ஜெனில் (16). நாகர்கோவிலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 20ஆம் தேதி சக மாணவியிடம் பள்ளிக்கு வெளியே பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆசிரியர் ஒருவர் மாணவனை கண்டித்ததுடன், அவரது தாயாரை அழைத்து மாணவனின் நடத்தை குறித்து எச்சரித்ததாகவும், டி.சி. வழங்குவதாக கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த கவின் ஜெனில், கடந்த 21ஆம் தேதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாணவரின் தற்கொலைக்கு ஆசிரியர்களின் கண்டிப்பே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் பள்ளி முன்பு மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி. மற்றும் டி.எஸ்.பி. மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவின்பேரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மாணவரின் உடல் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், உடலை வாங்க மறுப்பதாக உறவினர்கள் தெரிவித்ததால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



