ஈரோடு, ஆக. 4 –
பள்ளிக் கல்வித்துறை – மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு புத்தகத் திருவிழா நடந்து வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ‘மனிதப் பரிணாமமும் டிஜிட்டல் உலகின் சவாலும்’ என்கிற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
விழாவில் தொல்காப்பியத்தை முழுமையாக மனப்பாடம் செய்து 22 மணி 05 நிமிடங்களில் தொடர்ந்து பிழையின்றி எழுதிக் காட்டிய அரசுப்பள்ளி மாணவி மு.உமா மகேஸ்வரிக்கும் சிலப்பதிகாரத்தை முழுமையாக மனப்பாடம் செய்து ஒப்புவித்த அரசுப்பள்ளி மாணவிகள் வேணி, வீரச்செல்வி ஆகியோருக்கும் மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் பாராட்டு நிகழ்வு நடைபெற்றது. பாராட்டு மடல்களை சிறப்பு விருந்தினர் வழங்கினார்.
பேராசிரியர் க.பழனிதுரை எழுதிய ‘அரசமைப்பு சாசனம் – முகப்புரை ஓர் எளிய அறிமுகம்’ நூல் வெளியிடப்பட்டது. இந்நூல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டது. வி.வி.நேஷனல் மோல்டடு பர்னிச்சர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் வி.செந்தில்குமரன் நிகழ்வுக்குத் தலைமையேற்றார். ஈரோடு வேளாண் துறை இணை இயக்குநர் ஆர்.சிவக்குமார் முன்னிலை வகித்தார். எம்.ஆர்.கலர் லேப் நிர்வாக இயக்குநர் எல்.நாராயணன் வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் முதன்மை நீதிபதி, வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள், கல்லூரித் தாளாளர்கள், முதல்வர்கள் மற்றும் பலதுறை சார்ந்த பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.



