நாகர்கோவில், ஜூலை 30 –
நாகர்கோவில் கோட்டாறு ரயில்வே குடியிருப்பில் வசிப்பவர் பாலுச்சாமி. ரயில்வே துறை ஊழியரான இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியாகும். தற்போது மனைவி மேனகா (43) மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்று பாலுச்சாமி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அவர் மனைவி மேனகா மட்டும் இருந்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த மேனகா வீட்டை பூட்டி விட்டு வடிவீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். சிறு நேரத்தில் அவர் வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.
அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 14 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி கொலுசு மேலும் ரூ. 2500 ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது. உடனடியாக இது குறித்து கோட்டாறு போலீசருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை பதிவு செய்தனர். அப்போது ஒரு கைரேகை சிக்கியது.
மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை வைத்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து மேனகாவின் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேனகா ஆஸ்பத்திரி செல்வதை நோட்டம் விட்டு திருடர்கள் கைவரிசை காட்டி உள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு 45 நிமிடத்தில் வீட்டிற்கு திரும்பி உள்ளார். அதற்குள் கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.



