நாகர்கோவில், ஜூலை 25 –
நாகர்கோவில் நகருக்குள் கனிம வளங்கள் மற்றும் சரக்கு லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நடமாட்டத்தால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கனரக லாரிகள் அப்டா மார்க்கெட்டிலிருந்து புத்தேரி வழியாக திருப்பி விடப்பட்டு வருகின்றன. அந்த வழியாக அதிக அளவில் லாரிகள் திருப்பிவிடப்படுவதால் நாளுக்கு நாள் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
மேலும் குறுகலான சாலைகளில் இந்த கனரக லாரிகள் செல்லும்போது, தாழ்வாக செல்லும் மின் வயர்கள் மற்றும் கேபிள் மீது உரசி செல்வது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு இரட்டை அடுக்கு கண்டெய்னர் லாரிகள் அந்த வழியாக சென்றுள்ளன. அப்போது வழியில் தாழ்வாக இருந்த மின் கம்பிகளில் லாரிகள் பலமாக உரசி சென்றன. இதனால் மின்கம்பிகள் அறுந்து மின்தடை ஏற்பட்டது. அப்போது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். மேலும் அவர்கள் ஒன்று திரண்டு அந்த வழியாக வந்த கனரக லாரிகளை சிறை பிடித்தனர். குடியிருப்பு பகுதியில் நிறைந்த சாலை வழியாக கண்டெய்னர் லாரி இயக்கக் கூடாது என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். திடீரென பொதுமக்கள் லாரிகளை சிறை பிடித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற போலீசார் நகருக்குள் லாரிகள் நுழைவது மற்றும் இயக்கப்படுவது தொடர்பாக உரிய கட்டுப்பாடுகள் தீவிர படுத்தப்படும் எனவும், மின்வாரியத்துடன் பேசி தாழ்வாக செல்லும் மின் வயர்களை சரி செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் 2 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


