கன்னியாகுமரி, ஜூலை 20 –
பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகளை இயக்கி வருகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே சூரிய உதயத்தை காண கன்னியாகுமரி கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் சூரிய உதயத்தை கண்டு களித்த பிறகு பிறகு கடலில் வழக்கம் போல் காலை 8 மணிக்கு தொடங்கிய படகு போக்குவரத்து காலை 9 மணியளவில் கடலின் நீர்மட்டம் தாழ்வு காரணமாக நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் 11.30 மணியளவில் கடலில் நீர் மட்டம் சகஜ நிலைக்கு திரும்பியதைக் தொடர்ந்து படகு 2 1/2 மணிநேரம் இடைவேளைக்கு பின் படகு போக்குவரத்து தொடங்கியது.
அதனைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் கண்ணாடி இழை கூண்டு பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்த்துவிட்டு திரும்பினர்.



