சென்னை, ஜூலை 16 –
காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை குழந்தைகளுக்கான சுவாச நோய் சிகிச்சை சேவைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், சிறப்பு பல்துறை சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் கிளினிக் மற்றும் குழந்தைகளுக்கான மேம்பட்ட நுரையீரல் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், சிக்கலான சுவாச நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, நோயறிதல், சிகிச்சை மற்றும் நீண்டகால முழுமையான சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் அரிதான நோயாக கருதப்பட்டாலும், சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் தற்போது நாடு முழுவதும் அதிகளவில் அடையாளம் காணப்பட்டு வருகிறது. ஒவ்வொரு 10,000 முதல் 40,000 புதிதாகப் பிறக்கும் குழந்தைகளில் ஒருவருக்கு இந்நோய் ஏற்படுகிறது என மதிப்பிடப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 150 குழந்தைகள் சிஸ்டிக் ஃபைப்ரோசிஸுடன் பிறக்கின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. பல நூறு குழந்தைகள் இந்த நோயுடன் வாழ்ந்து கொண்டிருந்தாலும், அவர்களில் பலருக்கு இந்த நோய் இன்னும் கண்டறியப்படாமல் உள்ளது.
மருத்துவ இயக்குநர் டாக்டர் ஜனனி சங்கர் கூறுகையில், “சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் என்பது வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியான கண்காணிப்பும், பல்வேறு துறை நிபுணர்களின் ஒருங்கிணைந்த சிகிச்சையும் தேவைப்படும் நோயாகும். துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் தாமதமான நோயறிதல் இன்னும் பொதுவாக உள்ளது. பல குழந்தைகள், நுரையீரலில் நிரந்தர பாதிப்பு ஏற்பட்ட பிறகே எங்களிடம் வருகின்றனர். ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்து, முழுமையான சிகிச்சை அளித்தால், நோயின் போக்கை குறிப்பிடத்தக்க வகையில் மாற்றி, குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை பெரிதும் மேம்படுத்த முடியும். எங்களது சிஸ்டிக் ஃபைப்ரோசிஸால் (சி.எஃப்) கிளினிக் தமிழ்நாட்டில் இரண்டாவது மையமாகும். முதலாவது CMC வேலூர் சி .எம்.சியில் செயல்படுகிறது. தமிழ்நாட்டிற்கு வெளியே இந்தியாவில் இந்த வசதியைக் கொண்டுள்ள மருத்துவமனைகள் மேலும் இரண்டு மட்டுமே உள்ளன” என்றார்.
குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் பால ராமச்சந்திரன் கூறுகையில், “சமீபத்திய சிகிச்சை முன்னேற்றங்கள் சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் நோயாளிகளின் உடல்நல முன்னேற்றத்தை பெரிதும் மேம்படுத்தியுள்ளன. தகுதியான நோயாளிகளுக்கு வழங்கப்படும் புதிய சி .எஃப்.டி.ஆர் மாடுலேட்டர் சிகிச்சைகள், நோய்க்கு காரணமான மரபணு குறைபாட்டை நேரடியாகக் குறிவைத்து செயல்படுகின்றன. இதன் மூலம் உலகம் முழுவதும் பல குழந்தைகளின் வாழ்க்கைத் தரம் மாற்றமடைந்துள்ளது. இச்சிகிச்சைகள், நோயை முழுமையாகக் குணப்படுத்தாவிட்டாலும், ஆரம்பத்திலேயே தொடங்கப்பட்டால் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும், சிக்கல்களைக் குறைக்கவும், வாழ்க்கைத் தரத்தை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தவும் உதவுகின்றன” என்றார்.
நுரையீரல் நிபுணர் டாக்டர் வி.வி. விவேகானந்த்: சிஸ்டிக் பைப்ரோஸிஸுக்கு சிகிச்சை அளிப்பது நுரையீரல் தொற்றுகளைத் தாண்டி. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவு, பிசியோ தெரபி, நாளமில்லா சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகளை கையாளுதல், உளவியல் ஆலோசனை மற்றும் வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியான கண்காணிப்பு ஆகியவை அவசியமாகின்றன.
இதற்கான முழுமையான சிகிச்சைகளை ஓரிடத்தில் வழங்குவார்கள் என்று தெரிவித்தார்.


