தூத்துக்குடி, ஜூலை 16 –
பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாளை முன்னிட்டு, காமராஜர் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கான கபடி போட்டி ஜூலை 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காமராஜர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
போட்டியின் தொடக்க விழாவில் தி அரவிந்த் ஆட்டோ ஏஜென்சி (ஹீரோ மோட்டோகார்ப்) நிறுவனத்தின் ராஜ்குமார், அன்னை ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர்பழரசம் பி. விநாயகமூர்த்தி, தூத்துக்குடி கல்விக்கழக செயலாளர் பி.எஸ்.பி.கே.ஜே. சோமு மற்றும் காமராஜர் கல்லூரி முதல்வர் டாக்டர் கே. பானுமதி ஆகியோர் கலந்து கொண்டு போட்டியைத் தொடங்கி வைத்தனர்.
ஆண்கள் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தூத்துக்குடி செயிண்ட் மேரீஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம் பெற்று ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசை வென்றது. இரண்டாம் இடத்தை தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி ரூ.7 ஆயிரம், மூன்றாம் இடத்தை அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகளாபுரம் ரூ.5 ஆயிரம், நான்காம் இடத்தை காமராஜர் மேல்நிலைப்பள்ளி, நாலுமாவடி ரூ.3 ஆயிரம் பெற்றன.
பெண்கள் பிரிவில் தூத்துக்குடி தஸ் நெவிஸ் மாதா மகளிர் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம் பெற்று ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசை வென்றது. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காயல்பட்டினம் ரூ.7 ஆயிரம் இரண்டாம் இடத்தையும், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி ரூ.5 ஆயிரம்,மூன்றாம் இடத்தையும், தூத்துக்குடி விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி ரூ.3 ஆயிரம் நான்காம் இடத்தையும் பெற்றது.
நிறைவு விழாவில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் இயக்குநர் எஸ்.ஆர். அரவிந்த் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கி பாராட்டினார். போட்டிக்கான விளையாட்டு ஏற்பாடுகளை காமராஜர் கல்லூரி உடற்கல்வித் துறைத் தலைவர் முனைவர் ஆனந்தராஜ் தலைமையில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பாக மேற்கொண்டனர்.
ஒட்டுமொத்த போட்டி ஏற்பாடுகளை காமராஜர் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ராஜேஷ் தில்லை தலைமையில், துணைத் தலைவர்கள் டி. வன்னியராஜ், எஸ். சரவணக்குமார், செயலாளர் வி. விக்னேஷ், துணைச் செயலாளர்கள் என். கார்த்திக் செல்வன், ஏ. சக்திவேல், பொருளாளர் முனைவர் ஏ. கலையரசி மற்றும் பேராசிரியர்கள் முனைவர் பால்ராஜ், மதனகோபால் ஆகியோர் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினர்.



