திருச்சி, ஜூலை 8 –
திருச்சியில் சட்டவிரோதப் பணம் பரிமாற்ற விவகாரத்தில் ரூ.14.40 லட்சம் பணத்துடன் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் சர்வதேச ஹவாலா கும்பலுடன் தொடர்பு இருப்பதால், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை துவக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
திருச்சி கேகே நகர் காவல் உதவி ஆணையர் கென்னடி தலைமையில், கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி, உதவி ஆய்வாளர் செபாஸ்டின் உள்ளிட்ட 17 காவல் அதிகாரிகள் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அந்த வகையில் நேற்று முன்தினம் கே.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்பிரமணியபுரம் ராஜா தெருவில் உள்ள தனியாருக்கு சொந்தமான வீட்டில் உள்ள ஒரு அறையில் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கணக்கில் காட்டப்படாத ரூ.14.40 லட்சம் பணம், 150-க்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டுகள், 50 செல்போன்கள், சிம் கார்டுகள் இருந்தன.
இதுதொடர்பாக, வீட்டில் தங்கியிருந்த 6 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதையடுத்து, ராமநாதபுரம் தமீம்அன்சாரி, உத்திரகோசமங்கை அஜ்மீர் அலி, பழனிமுருகன், பிரவீன், முத்தமிழ்ச்செல்வன், கோடிக்குளம் ராஜ்குமார் ஆகிய 6 பேரையும் கைது செய்து, 2 நாட்களாக விசாரித்தனர். இதில் 6 பேரும் இந்திய பணத்தை அமெரிக்க டாலராக மாற்றுவது, டாலரை இந்தியாவின் ரூபாயாக மாற்றுவது உள்ளிட்ட சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதற்காக ரூ.1 லட்சத்துக்கு ரூ.6,000 கமிஷன் கிடைத்துள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவரின் வங்கி கணக்குக்கு இவர்கள் பணத்தை அனுப்பி உள்ளனர்.
அவர்களது உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என சாதாரண நபர்களை வங்கி கணக்கு தொடங்கச் செய்து, அவர்களது ஏடிஎம் கார்டுகள் மூலம் இந்த பணப் பரிவர்த்தனைகளை செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் திருச்சி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு சர்வதேச அளவிலான ஹவாலா கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர்.
கிரிப்டோ கரன்ஸி, சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை, பங்கு வர்த்தகம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டதால் அவர்களுக்கும், தீவிரவாத கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதால், என்ஐஏ அதிகாரிகள் இந்த விவகாரத்தை கூர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராமநாதபுரம் பகத் என்பவரை போலீசார் வலை வீசி தேடி வருவது குறிப்பிடத்தக்கது.



