திருச்சி, ஜூலை 6 –
மணப்பாறை அருகே, பெற்றோர் மற்றும் உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி மாற்று சமூகத்தைச் சேர்ந்த காதலனை ஒரு இளம்பெண் கரம் பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் வீட்டார், அவர்களின் புழக்கத்தை நோட்டமிட்டு வெளியில் சென்று வரும்போது பட்டப்பகலில் சினிமா பாணியில் 2 கார்களுடன் அவர்களை வழிமறித்தது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஆட்டோவில் இருந்த இளம்பெண்ணை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வலுக்கட்டாயமாக காரில் இழுத்துப்போட்டு கடத்திச் சென்றனர். நடுரோட்டில் நடந்த இந்த அதிரடி கடத்தல் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்த விபரம் வருமாறு: திருச்சி மாவட்டம் சித்தானந்தம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் மருங்காபுரி ஒன்றியம் முடுக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சித்திரவள்ளி ஆகியோர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில், மணப்பாறைக்கு வந்த அவர்கள், பின்னர் ஆட்டோவில் சித்தானந்தம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது திருச்சி–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாலப்பட்டி பிரிவு அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில், சித்திரைவள்ளியின் தந்தை மலையாண்டி மற்றும் அவரது உறவினர்கள் இரண்டு கார்களில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் ஆட்டோவை வழிமறித்து நிறுத்தி, சித்திரவள்ளியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றினர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் அஜித்குமார், தனது மனைவியை காப்பாற்றுவதற்காக கடுமையாக எதிர்த்து போராடினார். காரின் கண்ணாடிகளை உடைத்து மனைவியை மீட்க முயன்றபோதும், கண் இமைக்கும் நேரத்தில் பெண்ணை காரில் ஏற்றிக்கொண்டு உறவினர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பட்டப் பகலில் அரங்கேறிய இந்த சம்பவம் குறித்து சித்திரவள்ளியின் கணவர் அஜித்குமார் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் கதிரவன் தலைமையிலான போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு, கடத்திச் செல்லப்பட்ட காரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர் சித்திரவள்ளியை பாதுகாப்பாக மீட்ட போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, பெண்ணின் தந்தை மலையாண்டி மற்றும் அவரது உறவினர்கள் என மொத்தம் 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணத்தை ஏற்க மறுத்ததால் இந்த கடத்தல் முயற்சி நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த துணிகர கடத்தல் முயற்சி சம்பவம் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



