ஈரோடு, ஜூலை 3 –
பட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம் பி கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு உள்ளார்.
ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் நடந்த இந்த கூட்டத்திற்கு ஈரோடு மாநகர மாவட்ட பாமக செயலாளர் எஸ் ஆர் ராஜு தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது: கர்நாடக அரசு மேகதாது அணைக்கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா பகுதி பாலைவனம் ஆகிவிடும். சாப்பாடு கூட கிடைக்காத நிலை ஏற்படும். கர்நாடகா முதல் அமைச்சர் சிவக்குமார் குடிநீருக்காக மட்டுமே இந்த அணை பயன்படுத்தப்படும் விவசாயத்துக்கு பயன்படுத்தமாட்டோம் என்று சொல்கிறார். இது ஏமாற்று வேலையாகும். இந்த அணை கட்டப்பட்டால் நமக்கு குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்படும்.
இந்த அணையினால் காவிரி டெல்டா பகுதி மட்டும் அல்லாமல் தமிழ் நாடு முழுவதும் உள்ள பொது மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். எனவே மேகதாது அணை கட்டுவதை உடனடியாக தடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.இந்த அணை கட்டப்படுவதினால் வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள். தமிழ்நாடு மிகவும் பாதிக்கும். எனவே இப்போதே இதை தடுக்க வேண்டும். சாதி மதத்துக்கு அப்பாற்பட்டு அரசியலுக்கு அப்பாற்பட்டு வேறுபாடுகளை மறந்து இந்த அணைக்கட்டுவதை அனைவரும் தடுக்க வேண்டும்.
இது தொடர்பாக கோர்ட்டுகளில் பல்வேறு இடங்களில் இருந்து வழக்கு தொடர வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்ட போது அதை எதிர்த்து இளைஞர்கள் அனைவரும் போராடி வெற்றி கண்டதை போல மேகதாது அணை கட்டுவதையும் எதிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் மேகதாது அணை கட்டப்படுவதை எதிர்த்து நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று எதிர் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்ட சபை யில் பேசி உள்ளார். மேகதாது அணையே வேண்டாம் என்று என்று கூறும் போது நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கூறுவது தேவையில்லாதது இதனால் தீர்வு கிடைக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் ஈரோடு மாநகர மாவட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் பிரபு நன்றி கூறினார்.



