நாகர்கோவில், ஜூலை 1 –
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேலைவாய்ப்பு சட்டத்தை எதிர்த்தும், 100 நாள் வேலை உறுதி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
மேலும் இன்று ஜூலை 1ம் தேதியை கருப்பு தினமாக அறிவித்த மாற்றுத்திறனாளிகள் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மாவட்ட இணைச்செயலாளர் அருள் பேசுகையில்: கிராமப்புற எளிய மக்களின் வாழ்வாதாரமாக இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மத்திய அரசு படிப்படியாக முடக்கி வருகிறது. 2020- 21 இல் 369 கோடி மனித வேலை நாட்களாக இருந்த அளவு, தற்போது 290 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி வேலை நாட்களை ஒன்றிய அரசு வெட்டி சுருக்கி உள்ளது. என குற்றம் சாட்டினார். தற்போதைய புதிய சட்டத்தில் மாநில அரசுகள் 40 சதவீதம் செலுத்த வேண்டும் என்று கட்டாயம் இருப்பதால் வேலைவாய்ப்புகள் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்தனர்.
மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நாகர்கோவில் – கன்னியாகுமரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து 50 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நூற்றுக்கணக்கான போலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த மறியல் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



