மார்த்தாண்டம், ஜூன் 8 –
கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டம் என்ற பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 2ம் ஆண்டு படித்து வருகிறார். அவருக்கும் கோணம் பகுதியில் உள்ள கல்லூரியில் பிபிஏ 3ம் ஆண்டு படிக்கு மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த ஆறு மாதங்களாக இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் மாணவி படிக்கும் அதே கல்லூரியில் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த 20 வயது மாணவரும் படித்து வருகிறார். ஆரல்வாய்மொழி மாணவரும் அதே மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார். இதை அடுத்து ஆரல்வாய்மொழி மாணவருக்கு தான் பேசும் மாணவியுடன் தொலையாவட்டத்தை சேர்ந்த மாணவர் இன்ஸ்டாகிராமில் பேசுவது தெரிய வந்தது. இதனால் கோபம் அடைந்த ஆரல்வாய்மொழி மாணவர் இன்ஸ்டாகிராமில் சாட் மூலம் தொலையாவட்டத்தை சேர்ந்த மாணவரை தொடர்பு கொண்டு, நான் பேசும் பெண்ணிடம் நீ எப்படி பேசலாம் என கேட்டு அவர்களிடைய தகராறு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இரண்டு பேரும் நேரில் பேசி பிரச்சனைக்கு முடிவு கட்டலாம் என கூறி உள்ளனர். அப்போது தொலையாவட்டம் மாணவர் ஆரல்வாய்மொழி மாணவரை கருங்கல் பகுதிக்கு வா பேசலாம் என அழைத்துள்ளார். இதை அடுத்து ஆரல்வாய்மொழி மாணவர் தனது நண்பர்கள் 6 பேருடன் நேற்று கருங்கல் போலீஸ் நிலையம் முன்பு சென்றனர். தொடர்ந்து தொலையாவட்டம் மாணவரும் தனது நண்பர்கள் சிலருடன் கருங்கல் காவல் நிலைய பகுதிக்கு சென்றனர்.
காவல் நிலையம் அருகே இரு தரப்பினரும் பேச்சு வார்த்தை நடத்தினர். அந்த நேரம் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்க தொடங்கினர். அந்த நேரம் மோதலில் சிலர் அங்கு கடந்த கற்களை எடுத்து எறிந்து தாக்கியுள்ளனர். இதனால் காவல் நிலைய பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.
மோதல் நடந்து கொண்டிருந்தபோது இன்ஸ்பெக்டரின் வாகனம் காவல் நிலையத்திற்கு வந்தது. அந்த நேரம் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தூக்கி எறிந்த கற்கள் போலீஸ் சவாகன கண்ணாடி மீது பட்டு வாகனம் சேதமடைந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் இருதரப்பு வாலிபர்களையும் மடக்கி பிடிக்க முயன்றனர். போலீசாரை கண்டதும் வாலிபர்கள் சிதறி ஓட்டினார்கள். எனினும் சுதாரித்துக்கொண்ட போலீசார் தொலையாவட்டத்தைச் சேர்ந்த 4 வாலிபர்களை பிடித்தனர். மேலும் மற்றொரு தரப்பை சேர்ந்த 2 பேரையும் பிடித்தனர். 6 பேரையும் காவல் நிலையத்தில் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கருங்கல் போலீஸ் நிலையம் முன்பு நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


