கோவை, ஜூலை 01 –
தமிழ்நாடு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார் போதைப் பொருள் பயன்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதனையடுத்து அமைச்சரை பதவிநீக்கம் செய்யக்கோரி துடியலூர் அருகே என்.ஜி.ஜி.ஓ காலனி பகுதியில் கோவை வடக்கு மாவட்ட தி.மு.க மாணவரணி சார்பில் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் கோவை வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் தொ.அ.ரவி தலைமையிலும், மாணவர் அணி அமைப்பாளர் அந்தோனி ராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் மாவட்ட துணை செயலாளர் அசோக் பாபு ஆறுக்குட்டி, நகர செயலாளர்கள் அறிவரசு, குருபிரசாத், முனுசாமி, அஸ்ரப் அலி, ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்குமார், காந்தி, சார்பணியினர் மாணவரணி, மகளிர் அணி, இளைஞர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 400க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.



