களியக்காவிளை, ஜூலை 11 –
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை தேர்வு நிலை பேரூராட்சியில் ஒரே பதவியில் 20 ஆண்டுகள் பணி முடிந்த ஊழியர்களுக்கு சிறப்பு நிலைக்கான ஊதியம் வழங்க மறுக்கும் பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் தமிழகத்தில் மற்ற மாவட்டங்களிலும் பணியாற்றும் ஒரே பதவியில் 20 ஆண்டுகள் பணி செய்த ஊழியர்களுக்கு நீதிமன்ற உத்தரவு படி சிறப்பு நிலைக்கான ஊதியம் வழங்க பேரூராட்சி இயக்குநர் உத்தரவின் பேரில் அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஆணை வழங்கி உள்ளது.
இந்நிலையில் குமரி மாவட்டம் களியக்காவிளை பேரூராட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் விநியோக ஊழியர்களாக பிபின் ஷாஜி மற்றும் ஆல்பன் ஆகியோரும் மின் உதவியாளர் ஆக எபனைசர் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். மற்ற பேரூராட்சிகளில் முறைப்படி 20 ஆண்டுகள் ஒரே பதவியில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சிறப்பு நிலைக்கான ஊதியம் வழங்க ஆணை வழங்கி பல மாதங்கள் ஆகியும் களியக்காவிளை பேரூராட்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய மூன்று ஊழியர்களுக்கும் பேரூராட்சி செயல் அலுவலரான சந்திர கலா சிறப்பு நிலைக்கான ஊதியம் வழங்க மறுப்பு தெரிவித்து வருகிறார்.
மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குநர் உத்தரவிட்டும் செயல் அலுவலர் கண்டுகொள்ளாத நிலையில் தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம் சார்பில் 50 க்கும் மேற்பட்டோர் களியக்காவிளை தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



