நாகர்கோவில், ஜூன் 25 –
புதுக்கடை அருகே இனயம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (33). அந்த பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி கடந்த 2020 ஆம் ஆண்டு இனயம் பகுதியில் சிறுமியின் வீட்டிற்கு ஆளில்லாத நேரம் அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் குளச்சல் மகளிர் காவல் நிலைய போலீசார் சாகுல் ஹமீது மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சாகுல்ஹமீதை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரையா சாகுல் ஹமீதை குற்றவாளி என தீர்ப்பளித்து 32 வருடம் சிறை தண்டனையும் 14 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.


