நாகர்கோவில், ஜூன் 25 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்களை கட்டுப்படுத்த போலீசாரின் நடை ரோந்து பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில், வடசேரி மற்றும் புத்தேரி மருத்துவமனை பகுதிகளில் அண்மை காலமாக விரும்ப தகாத குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் குமரியில் அனைத்து காவல் நிலையங்களிலும் அடிக்கடி பிரச்சினைகள் மற்றும் சமூக விரோத செயல்கள் நடக்கிறது.
இது போன்ற பகுதிகளில் இரவில் போலீசார் வாகனங்களில் வந்து செல்வதுடன், காலை மற்றும் மாலை வேலைகளில் 2 போலீசார்விதம் நடந்து சென்று கண்காணிக்கும் வகையில் நடை ரோந்து பணி மேற்கொள்ள எஸ்பி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி காலை மற்றும் மாலைகளில் வீக்அவர் நேரங்களில் 2 போலீசார் விதம் நடந்து சென்று காவலில் ஈடுபட்டு வருகின்றனர். பஸ் நிறுத்தங்கள், அதன் அருகில் உள்ள டீ மற்றும் குளிர்பான கடைகள் முன்பு நின்று கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்: குற்றவாளிகள் தவறுகளில் ஈடுபடும் முன்பே அதனை தடுக்க வேண்டிய காவலர்கள் கடமை. போலீசார் நடமாட்டம் அதிகமாக இருப்பதை பார்த்தால் யாரும் தேவையற்ற தகராறுகளில் ஈடுபட மாட்டார்கள். மக்களுக்கும் போலீசாரை பார்க்கும்போது ஒரு நம்பிக்கை கிடைக்கும். இதனை கருத்தில் கொண்டு பஸ் நிறுத்தம் மக்கள் கூடும் பகுதிகளில் மாவட்டம் முழுவதும் நடை ரோந்து தீவிர படுத்த எஸ் பி ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன் மூலம் பெண்களை கேலி கிண்டல் செய்வது, வாகனங்களில் அதிவேகமாக செல்வது, கடைகளில் தகராறுகளில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் வலுவாக குறையும். மாவட்ட எஸ் பி, ஏ எஸ் பி, டி எஸ் பி மேற்பார்வையில் 37 இன்ஸ்பெக்டர்கள், 50 மேற்பட்ட எஸ்ஐகள், 250 காவலர்கள் இந்த பணியில் ஒரே நேரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



